நீரிழிவு என்றால் என்ன?
நீரிழிவு என்பது உங்கள் இரத்தத்தில் சீனி (குளுக்கோஸ்) அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. உங்கள் சதையச்சுரப்பி போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது இன்சுலின் விளைவுகளுக்கு உங்கள் உடல் சரியாக பதிலளிக்காதபோது இது உருவாகிறது. நீரிழிவு நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. நீரிழிவு நோயின் பெரும்பாலான தாக்கங்கள் நாள்பட்டவை (வாழ்நாள் முழுவதும்). இந்த நோயின் அனைத்து தாக்கங்கங்களையும் மருந்துகள் மற்றும்/அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்.
நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது?
உங்கள் இரத்த ஓட்டத்தில் அதிக அளவு குளுக்கோஸ் காணப்படுவதே நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் நீரிழிவு வகையைப் பொறுத்து மாறுபடும்.
நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பின்வருமாறு:
- இன்சுலின் எதிர்ப்பு: வகை 2 நீரிழிவு நோய்- முக்கியமாக இன்சுலின் எதிர்ப்பின் விளைவாகும். உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் ஈரலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு பதிலளிக்காதபோது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது. உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாமை, உணவுமுறை, ஓமோன் ஏற்றத்தாழ்வுகள், மரபியல் மற்றும் சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இன்சுலின் எதிர்ப்பிற்கு காரணமாக அமைகின்றன.
- தன்னுடல் தாக்க நோய்: உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் சதையச்சுரப்பியில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கும் போது வகை 1 நீரிழிவு மற்றும் மறைந்திருக்கும் தன்னுடல் தாக்க நீரிழிவு (LADA) ஏற்படுகிறது.
- ஓமோன் சமநிலையின்மை: கர்ப்ப காலத்தில், நஞ்சுக்கொடி இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும் ஓமோன்களை வெளியிடுகிறது. உங்களின் சதையச்சுரப்பியால் இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் உருவாகலாம். உடல் முனை வீக்கம் (ACROMEGALY) மற்றும் குஷிங் நோய்க்குறி (CUSHING’S SYNDROME) போன்ற ஓமோன் தொடர்பான பிற நிலைகளும் வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
- சதையச்சுரபியில் ஏற்படும் சேதம்: உங்கள் சதையச்சுரபிக்கு ஏற்படும் பாதிப்பு , அறுவை சிகிச்சை அல்லது காயம் – இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனை பாதிக்கலாம், இதன் விளைவாக வகை 3c நீரிழிவு நோய் ஏற்படலாம்.
- மரபணு மாற்றங்கள்: சில மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக MODY வகை மற்றும் பிறந்த குழந்தையில் ஏற்படும் நீரிழிவு நோய் வகை போன்ற நீரிழிவு நோய் வகைகளை ஏற்படும்.
- மருந்துகளால் ஏற்படும் நீரிழிவு நோய்: HIV /எய்ட்ஸ் மருந்துகள் மற்றும் இயக்க ஊக்கி மருந்துகள்(CORTICOSTEROIDS) உள்ளிட்ட சில மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு, வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
சர்க்கரை (நீரிழிவு) நோயின் அறிகுறிகள் என்ன?
நீரிழிவு நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
- அதிகரித்த தாகம் மற்றும் வாய் வறட்சி.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- சோர்வு.
- மங்கலான பார்வை.
- விவரிக்க முடியாத எடை இழப்பு.
- உங்கள் கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு.
- குணமடையாத புண்கள் அல்லது வெட்டுக்கள்.
- அடிக்கடி தோல் மற்றும்/அல்லது பிறப்புறுப்பு பங்கசு தொற்று.
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் வைத்தியரிடம் பேசுவது முக்கியம்.
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வகைகளுக்கு ஏற்பவாறு:
வகை 1 நீரிழிவு:
வகை1 நீரிழிவின் அறிகுறிகள் பொதுவாக விரைவாக சில வாரங்கள் அல்லது மாதங்களில் உருவாகும். நீரிழிவு கீட்டோ அமில மிகை (Diabetic Keto acidosis -DKA ) எனப்படும் கடுமையான சிக்கலின் அறிகுறிகளான கூடுதல் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். DKA உயிருக்கு ஆபத்தானது மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய் நிலையாகும். DKA அறிகுறிகளாவன வாந்தி, வயிற்று வலி, பழ வாசனையுடன் கூடிய சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும்.
வகை 2 நீரிழிவு மற்றும் நீரிழிவுக்கு முந்திய நிலை (Prediabetes):
உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவை மெதுவாக உருவாகும் என்பதால் நீங்கள் அவற்றை கவனிக்காமல் இருக்கலாம். நீங்கள் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கு முன் வழக்கமான இரத்தப்பரிசோதனையில் உயர் இரத்த சீனியின் அளவைக் கண்டுபிடிக்கலாம். நீரிழிவுக்கு முந்திய நிலையின் மற்றொரு சாத்தியமான அறிகுறி என்னவென்றால் உங்கள் உடலின் சில பகுதிகளில் (அகாந்தோசிஸ் நைகிரிகன்ஸ் – Acanthosis nigricans) தோல் கருமையாக மாற்றமடையும்.
கர்ப்பகால நீரிழிவு:
கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகளை நீங்கள் பொதுவாக கவனிக்க மாட்டீர்கள்.ஏனென்றால் எதுவித நோய் அறிகுறிகளும் தென்படாது. கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு உங்கள் சுகாதார வழங்குநர் உங்களை பரிசோதிப்பார்.
நீரிழிவு நோயைக் கண்டறிதல்
உங்கள் வைத்தியர் உங்களுக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இருக்கின்றதா என்று கேட்டறிந்து அதற்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வார்.
HbA1C சோதனை- இது கடந்த 2 முதல் 3 மாதங்களில் இரத்த குளுக்கோஸ் அளவை அளவிடுகிறது. HbA1C – 6.5% அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமானம் நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
FPG (ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை) – ஃபாஸ்டிங் ரத்த குளுக்கோஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது இரத்த குளுக்கோஸை அளவிடுகிறது. நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும், எனவே சோதனைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரத்திற்கு தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாது.
2 சோதனை சந்தர்ப்பங்களில் 126 mg/dL அல்லது அதற்கு மேல் உள்ள FPG நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
GTT – (குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை)- இரத்தத்தில் குளுக்கோஸை அளவிடுகிறது. சோதனைக்கு முன் குறைந்தது 8 மணிநேரமும், இனிப்பு சுவையுள்ள ஆரஞ்சு பானத்தை அருந்திய பிறகு 2 அல்லது 3 மணிநேரமும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
இரத்த குளுக்கோஸின் அளவு 200 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது அது நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
சிகிச்சை முறைகள்
ஆரோக்கியமான உணவு உங்கள் இரத்த குளுக்கோஸை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது மட்டுமல்லாது இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
ஒவ்வொரு உணவிலும் சரியான அளவு கார்போஹைட்ரேட் சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
கார்போஹைட்ரேட் – இது குளுக்கோஸ் மற்றும் இனிப்புகள், தானியங்கள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பால் மற்றும் தயிர் ஆகியவற்றில் காணப்படுகிறது. ஒரு உணவியல் நிபுணர் அல்லது சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளர் உங்கள் உணவைத் திட்டமிட உதவலாம்.
சிலருக்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவும், அதிக உடற்பயிற்சியும் போதுமானது. இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த சிலருக்கு இன்சுலினும் தேவைப்படலாம். நீரிழிவு நோயினால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க நீங்கள் வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கலாம். இந்த பிரச்சனைகள் சிக்கல்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயம் மற்றும் இரத்த குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளால் இறக்க வாய்ப்புகள் அதிகம்.
உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ராலுக்கும் மருந்து தேவைப்படலாம். நீங்கள் புகைபிடித்தால், புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் இதயம் மற்றும் பெரிய இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள்
நீரிழிவு நோயின் முக்கிய சிக்கல்கள் யாவை?
- கண்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் (ரெட்டினோபதி) …
- நீரிழிவு காரணமாக கால்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் தீவிரமானவை மற்றும் சிகிச்சை ளிக்கப்படாவிட்டால் கால்கள் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
- மாரடைப்பு மற்றும் பக்கவாதம்.
- சிறுநீரக பிரச்சனைகள் (நெஃப்ரோபதி)
- நரம்பு பாதிப்பு (நியூரோபதி)
- ஈறு நோய் மற்றும் பிற வாய் பிரச்சனைகள்.
- புற்றுநோய்.
நீரிழிவு என்பது பல முக்கிய உறுப்புகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் செயலிழப்பை ஏற்படுத்துகின்ற ஒரு நோயாகும். இதன் தகங்களிலிருந்து உறுப்பு செயலிழப்பைத் தடுப்பை தடுப்பதற்கான சிறந்த வழி இரத்தத்தில் சீனியின் அளவை துல்லியமாக கட்டுப்படுத்துவதேயாகும்.