டெங்கு காய்ச்சல் தான் வந்துள்ளது என்பதை எப்படி காய்ச்சல் வரும்போது அறியலாம்?
- இது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல்.ஏடிஸ் எனப்படும் நுளம்பு கடிப்பதனால் பரப்பப்படுகிறது.
- காய்ச்சலுடன் கடுமையான தலைவலி, கண்களைச் சுற்றிவலி, உடல் முழுக்க வலி(தசைகள் மற்றும் எலும்புகள்) என்பன பொதுவாகக்காணப்படும்.
- நேரத்துடனேயே டெங்கு காய்ச்சல் என்பதை அறிந்து தகுந்த வைத்தியரை அணுகி சிகிச்சை எடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை தடுக்கமுடியும்.
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றே இருக்கும்.
- சில நோயாளர்களில் மட்டும் இது தீவிர குருதிப்பெருக்கு நிலைக்கு இட்டுச்செல்லும். அப்படியான சந்தர்ப்பங்களில் குருதி திரவப்பாயமானது (Plasma)கசிந்து வயிறு,நுரையீரல்களுக்குள் தேங்கி ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும்
டெங்குகாய்ச்சல் என எப்படி கண்டு பிடிப்பது?
இதை காய்ச்சல் மற்றும் அதனோடு சேர்ந்து வரும் மற்ற குணம் குறிகளை வைத்து நிர்ணயம் செய்யலாம்.
இவற்றோடு டெங்கு வைரஸின் நோய் அலகை(NS1 Ag) குருதியில் சோதனை செய்வதன் மூலமும் காய்ச்சல் ஆரம்ப நாட்களில் அறிந்து கொள்ளலாம்.
குருதிப்பரிசோதனைகளின்போது குருதிச்சிறுதட்டுகளின் அளவில் ஏற்படும் மாற்றங்களாலும் டெங்கு காய்ச்சல் என அறியலாம்
டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்?
- ஒரு தகுந்த வைத்தியரை அணுகி அவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்
- வேலைகளில் ஈடுபடாமல் ஓய்வாக இருக்கவேண்டும்
- தேவையான அளவு நீராகாரம் எடுக்க வேண்டும்
- காய்ச்சலுக்கு பரசிட்டமோல் மாத்திரைகளை வைத்தியரின் பரிந்துரைக்கமைய எடுக்கவும்
- அஸ்பிரின்,ஸ்ரெரொய்ட் போன்ற மாத்திரைகளை காய்ச்சலுக்கு எடுக்ககூடாது.
- நிறமூட்டிய திரவபானங்களை தவிருங்கள்
- சில வேளைகளில் நீங்கள் ஏற்கனவே எடுக்கும் மருந்துகள் சிலவற்றை வைத்தியர் எடுக்கவேண்டாம் என பரிந்துரை செய்வார்
- சிறுநீர் கழிக்கும் போது அதன் நிறம் மற்றும் அளவை அவதானிக்கவும்
- டெங்கு காய்ச்சலின் ஆபத்தான குணங்குறிகளை அறிந்து வைத்திருங்கள்
- வைத்தியரின் அறிவுரைக்கேற்ப திரும்பவும் சந்தியுங்கள்
- குருதிப்பரிசோதனைகளை வைத்திய பரிந்துரைக்கேற்ப திரும்பவும் செய்யுங்கள்
டெங்கு காய்ச்சலின் ஆபத்தான குணங்குறிகள் எவை?
- திரவ ஆகாரங்களை எடுக்க முடியாத நிலை
- தொடர்ச்சியான வாந்தி,வயிற்றோட்டம்,வயிற்று வலி
- குருதி கசிவு அல்லது பெருக்கு
- வெளியேறும் சிறுநீர் அளவு குறைவடைதல்/சிறுநீர் மிகவும் கடுமையான நிறத்தில் வெளியேறத்
- மயக்கத்தன்மை/எழுந்து இருப்பதில் அல்லது நிற்பதில் சிரமம்
- உணர்வு இழத்தல்/குழப்பம்
- மிகவும் சோர்வாய் இருத்தல்
எந்த சந்தர்ப்பங்களில் டெங்கு நோயாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது?
- டெங்கு காய்ச்சலின் ஆபத்தானகுணங்குறிகள் காணப்படுதல்
- குருதிச்சிறுதட்டு எண்ணிக்கை 130000 விட குறைவடையுமெனில்
- நீண்ட தொற்றாநோய்கள் உடையவர்கள்,கர்ப்பிணித்தாயமார்
டெங்கு நோய் அலகு குருதியில் இருப்பது அனுமதிக்கான ஒருகாரணமாக அமையாது
வைத்தியாசாலையில் அனுமதித்த பிற்பாடு என்ன சிகிச்சை வழங்கப்படும்
- விடுதியில் மருத்துவர்களும், தாதியர்களும் பொருத்தமான சிகிச்சைகளை வழங்குவார்கள்
- உங்களின், காய்ச்சல், நாடித்துடிப்பு,குருதி அமுக்கம், குடிக்கும் திரவவகை,வெளியேறும் சிறுநீர் அளவு என்பன சரியான நேர இடைவெளிகளில் கண்காணிக்கப்படும்
- குருதி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும்
- தேவை ஏற்படின் ஸ்கான் பரிசோதனையும் செய்யப்படும்
டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு காய்ச்சலின் சிக்கலான நிலையையே டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சல் என்கிறோம்
இதன்போது குருதி திரவப்பாயமானது கசிந்து வெளியேறுவதால் குருதிநாடிகளில் குருதியின் அளவு குறைகிறது.
இச்சிக்கல் நிலை சுமார் 48 மணித்தியாலங்கள் நீடிக்கும்.
இதன்போது காய்ச்சல் நின்றிருக்கும் இருந்தாலும் நோயாளியின் நிலைமை மேலும் மோசமாகலாம்
இந்நிலையின்போது நோயாளர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளில் தீவிர மருத்துவ கண்காணிப்பில்
இருக்கவேண்டும். இதனால் மேலும் ஆபத்தான விளைவுகள் வராமல் தடுக்கலாம்
எப்போது டெங்கு நோயாளியை வைத்தியசாஸையிலிருந்து வீட்டுக்கு விடலாம்
- சாதாரண டெங்கு காய்ச்சல் ஆயின் காய்ச்சல் விட்டு, குருதிப்பரிசோதனைகளில் எதுவித பிரச்சினைகளும் இல்லையென்றால் விடலாம்
- டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் தீவிர நிலைக்கு சென்றவர்கள் அதிலிருந்து பூரண நலமாகியபின் விடலாம்
- காய்ச்சல் இல்லாமல்,இருத்தல்,
பசி ஏற்படுதல், குருதிச்சிறுதட்டு எண்ணிக்கை கூடுதல் ,உள்ளங்கை ,பாதங்களில் சிவந்து கடித்தல் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாவதன் அறிகுறிகளாகும்
குணமடைந்த நோயாளி வீடு செல்லும்போது கவனிக்கவேண்டியவை எவை?
- ஓய்வு
- வைத்தியர் குறிப்பிட்ட நாளில் திரும்பவும் குருதிப்பரிசோதனை செய்து காட்டுதல்
- கடுமையான வேலை, உடற்பயிற்சியில் ஈடுபட முன்னர் தகுந்த வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுதல்
குருதிசிறுதட்டுஎண்ணிக்கைக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு?
- டெங்கு ஆபத்தான நிலைக்குச்செல்கின்றதா என அறிந்து கொள்வதில் நிறைய காரணிகள் உள்ளன, அவற்றில் குருதிச்சிறுதட்டு எண்ணிக்கையும் ஒன்றாகும்
- இது டெங்கு காய்ச்சல் தான் என அறியவும், ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்கின்றதா மற்றும் குணமாகின்றதா என அறியவும் உதவுகின்றது
- இருந்தாலும் சடுதியாக குருதிச்சிறுதட்டு எண்ணிக்கை குறைந்தால் வீட்டில் காய்ச்சலோடு இருப்போர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்
இயற்கை மருந்துகள் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துமா?
டெங்கு காய்ச்சல் குணப்படுத்துவதற்கான மருந்துகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
- சீரான தகுந்த மருத்துவகண்காணிப்பும், உள்ளெடுக்கும் நீராகரம், வெளியேறும் சிறுநீர் அளவுகளை கண்காணித்து அதற்கு ஏற்றவாறு செயற்படுவதன் மூலமே டெங்கு காய்ச்சல் மற்றும் அதன் ஆபத்தான நிலைகளிலிருந்து பாதுகாத்து கொள்ளமுடியும்
டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?
- உங்கள் வீடு மற்றும் சுற்றாடலை துப்பரவாகவும் நுளம்பு பெருகுவதற்கான இடங்கள் இல்லாமலும் பேணவேண்டும்
- நீர் தேங்கி நிற்கக்கூடிய பாத்திரங்கள்,கொள்கலன்கள் என்பவற்றை தகுந்த முறையில் தரம்பிரித்து ஒதுக்கவேண்டும்
- நுளம்பு கடிக்காமல் தடுப்பதற்கு ஏற்றவகையில் ஆடைகள் அணிதல் அல்லது இயற்கையான நுளம்பு விரட்டிகளை பாவித்தல், நுளம்பு வலைகளை பாவித்தல்
- நுளம்பு பெருகும் காலங்களை முன்கூட்டியே அறிந்து
சிரமதானம்மூலம் சூழலை சுத்தமாக வைத்திருத்தல்.