லெப்டோஸ்பைரோசிஸ்

எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்)என்றால் என்ன?

எலிக்காய்ச்சல் என்பது ஒரு வகையான பக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும். இது முக்கியமாக மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது. எலிக்காய்ச்சலுக்கான முக்கியமான அறிகுறியாக காய்ச்சலுடன் தசை நோ,கண் மஞ்சளாதல் என்பவற்றை குறிப்பிடலாம். அத்துடன் இது பலவகையான சிக்கல் நிறைந்த ஆபத்தான விளைவுகளையும் உருவாக்கும். அதில் முக்கியமாக சிறுநீரகங்கள் பழுதடைவதை குறிப்பிடலாம். எலிக்காய்ச்சலை உருவாக்கும் பக்டீரியா விலங்குகளின் சிறுநீரில் காணப்படுகின்றது. இவ்வாறு தொற்றுக்குள்ளான விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட மண்ணிலோ அல்லது நீர் நிலைகளிலோ இந்த பக்டீரியா காணப்படுகின்றது. இவ்வாறான நீர் மற்றும் சேறு நிறைந்த மண்ணுடன் மனிதர்கள் தொடுகையுறும்போது இந்த பக்டீரியா மனிதர்களை சென்றடைந்து நோயை உருவாக்குகின்றது.

எலிக்காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகின்றது?

எலிக்காய்ச்சல் ஒரு வகையான பக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பக்டீரியா சில விலங்குகளில் காணப்படுகின்றது. எனவே விலங்குகள் மூலம்தான் எலிக்காய்ச்சல் பரவும். இவை பக்டீரியாக்களின் காவிகளாக காணப்படுகின்றன. எலிக்காய்ச்சலை உருவாக்கும் பக்டீரியா முக்கியமாக, எலிகள், கால்நடைகள் மற்றும் எருமை போன்ற பண்ணை விலங்குகளின் சிறுநீரில் காணப்படுகின்றது. இவ்வாறு தொற்றுக்கொள்ளான விலங்குகள் சிறுநீரை கழிக்கும்போது சிறுநீரில் உள்ள பக்டீரியா மண்ணையும், நீர்நிலைகளையும் சென்றடைகின்றது. மனிதன் இவ்வாறான தொற்றுக்கொள்ளான சிறுநீருடனோ, மண்ணுடனோ அல்லது நீர் நிலைகளுடனோ நேரடியாக தொடுகையுறும்போது இந்த பக்டீரியா மனிதனுக்கு தொற்றை ஏற்படுத்துகின்றது.

இலங்கை போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அடிக்கடி ஏற்படும் அதிகமான மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற சந்தர்ப்பங்களில் மனிதர்கள் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியா தொற்றுக்குள்ளான நீருடனும், சேற்று மண்ணுடனும் தொடுகையுறும்போது இந்நோய் மக்களுக்கு அதிகமாக பரவுகின்ற சந்தர்ப்பங்களாக அமைகின்றன.

எவ்வகையான விலங்குகள் காவிகளாக செயற்பட்டு நோயை பரப்பலாம்?

எலிக்காய்ச்சலானது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதால் இது சோனோட்டிக்(zoonotic)நோய் என அழைக்கப்படுகின்றது. இலங்கையிலே முக்கியமாக பின்வரும் விலங்கினங்களை எலிக்காய்ச்சலுக்கான நோய்க்காவிகளாக குறிப்பிடலாம்.

  1. கொறித்துண்ணிகள்: எலிகள் போன்ற கொறித்துண்ணும் விலங்குகளே தொற்றவதற்கான பிரதான காவிகளாகும். சுகாதார பராமரிப்பு குறைவான நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுற்றுச்சூழலில், கொறித்துண்ணிகள் இருப்பதால் மண் மற்றும் நீர் நிலைகள் மாசடைந்து எலிக்காய்ச்சல் பரவுவதற்கு முக்கியமான காரணமாக அமைகின்றன.
  2. கால்நடைகள்: ஆடு மாடுகள், பன்றிகள் போன்ற கால்நடைகளின் சிறுநீரிலும் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படலாம். எனவே இவ்வாறான கால்நடைகளுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள விவசாயிகள், மற்றும் விலங்கு பராமரிப்பாளர்கள் போன்றவர்கள் எலிகாச்ய்சலால் பாதிக்கப்பட அதிக சந்தர்ப்பம் உள்ளது.
  3. நாய்கள்: எலிக்காய்ச்சல் நாய்களையும் பாதித்து நாய்களின் சிறுநீரிலும் இந்த பக்டீரியா காணப்படலாம். எனவே நாய்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களும், நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்களும் எலிக்காய்ச்சல் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை சரியாக கையாள வேண்டும்.
  4. வனவிலங்குகள்: மான் மற்றும் சிறிய பாலூட்டிகளான காட்டு விலங்குகளும் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியாவை பரப்பக்கூடிய விலங்குகளாக காணப்படலாம். எனவே வன விலங்குகளுடன் தொடர்பு பட்டவர்களும் எலிக்காய்ச்சல் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை சரியாக கையாள வேண்டும்.
  5. பூனைகள்: எலிக்காய்ச்சலை உருவாக்கும் பக்டீரியாவை காவுகின்ற தன்மை பூனைகளுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. ஒரு சில ஆய்வுகளிலேயே பூனைகளும் இந்த பக்டீரியாவை காவலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மேலே கூறிய மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது பூனைகளுக்கும் எலிக்காய்ச்சலுக்குமான தொடர்பு மிகக் குறைவானதாகவே உள்ளது.

எலிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய அதிகமான சந்தர்ப்பங்கள் எவை?

மேலே குறிப்பிட்டதை போன்று தொற்றுக்குள்ளான விலங்குகளின் சிறுநீரால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீருடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய எல்லா சந்தர்ப்பங்களும் எலிக்காய்ச்சல் தொற்றக்கூடிய சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். உதாரணமாக அசுத்தமடைந்த நீரை அருந்தும் போது, அசுத்தமடைந்த நீர் கண்களிலே தெறிக்கும் போது அல்லது தோலில் சிறு காயங்களுடன் அசுத்தமடைந்த நீர் நிலைகளில் நேரடியாக வேலை செய்யும் போது இந்த பக்டீரியா உடலை சென்றடையலாம்.

மேலும் தோட்டத்தில் தோட்ட வேலை செய்யும் விவசாயிகள், வடிகால்களை சுத்தம் செய்யும் வேலைகளுடன் தொடர்பட்டவர்கள் ஆகியோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களிலும், அசுத்தமடைந்த/தொற்றுக்கொள்ளான நீர் நிலைகளில் சிறுவர்கள் விளையாடும் சந்தர்ப்பங்களிலும் எலிக்காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளது.

எலிக்காய்ச்சல் ஆபத்தான நோயா?

எலிக்காய்ச்சல் நோயானது சாதாரண காய்ச்சல் முதல் மிகவும் கடுமையான சிக்கல் நிறைந்த நோய் வரை பல வகையான நிலைகளில் மனிதர்களை பாதிக்கலாம். இந்நோய் கடுமையாக பாதிக்கும் போது சிறுநீரகங்கள், நுரையீரல், இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகளை தாக்கி உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இருப்பினும் எலிக்காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை முறைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் இதனை பூரணமாக குணமாக்க முடியும்.

இலங்கையில் நீங்கள் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என எப்போது சந்தேகிக்க வேண்டும்?

கடுமையான காய்ச்சலுடன் நடுக்கம், அதிகமான தலைவலி, அதிகமான உடல் வலி, கண்கள் மஞ்சளாக காணப்படுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவடைதல், இருமும் போது சளியுடன் இரத்தம் வெளியேறுதல் மற்றும் மூச்சு விடுவதில் கஷ்டம் ஏற்படுதல் ஆகியன எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். விசேடமாக, மேலே குறிப்பிட்டவாறு தொற்றுக்குள்ளான நீர் நிலைகளுடனும் அல்லது சேற்று நீருடனும் தொடுகை ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சலுடன் இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும் போது எலிக்காய்ச்சலை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக நீங்கள் தகுந்த வைத்தியரை அணுக வேண்டும். அத்துடன் மேற்குறிப்பிட்டவாறு விலங்குகளுடனோ அல்லது நீர் நிலைகளுடனோ உங்களுக்கு ஏற்பட்ட தொடுகை பற்றிய விபரத்தை வைத்தியருக்கு கூற வேண்டும் ஏனெனில் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை முறைகளை வழங்குவதன் மூலம் இந்நோயை பூரணமாக குணப்படுத்துவதுடன் சிக்கல் நிறைந்த நிலைக்கு மாறுவதை தடுக்க முடியும்.

தொற்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். தொற்று அபாயத்தைக் குறைக்கக்கூடிய பாதுகாப்பு ஆடைகளை அணிதல் மற்றும் நல்ல சுகாதார முறைகளை பேணுதல் என்பன நோய்த் தொற்று ஏற்படுவதை குறைக்கக்கூடிய முறைகளாகும்.

  1. தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்தல்: வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அவற்றிலிருந்து விலகி இருத்தல் சிறந்தது.
  2. பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்துதல்: தொற்று அபாயத்தைக் குறைக்கக்கூடிய கையுறைகள், காலணிகள் போன்ற பாதுகாப்பு ஆடைகளை பொருத்தமான சந்தர்ப்பங்களில் அணிதல் சிறந்தது.
  3. சரியான சுகாதார நடைமுறைகளை கையாளுதல்: வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்வது சிறந்த பழக்கமாகும்.
  4. கொறித்துண்ணி கட்டுப்பாடு: எலிகள் போன்ற கொறித்துண்ணும் விலங்குகளின் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் இவ்வகையான விலங்குகளுடனான தொடர்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  5. விவசாயிகள்: எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சல் வராமல் தடுக்கலாம். விவசாயிகள் விவசாய காலப்பகுதியில் உங்களுடைய சுகாதார வைத்திய அலுவலகத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் இவ்வாறான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

எலிக்காய்ச்சல் நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுமா?

எலிக்காய்ச்சல் ஒரு மனிதரிலிருந்து இன்னொரு மனிதருக்கு பரவுவதில்லை. இதனால் நீங்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி உள்ளதா?

மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. நோய்ப்பரவலை தடுக்கும் முறைகளே இந்நோயை தடுப்பதற்கான முக்கியமான முறைகள் ஆகும்.

படங்கள்:
எலிக்காய்ச்சல் பரவுதல்